1981 ஆம் ஆண்டு முதல்
பாடப்பிரிவுகள் :
 • பி.ஏ. – இளங்கலைத்தமிழ்
 • எம்.ஏ. – முதுகலைத்தமிழ்
 • எம்.பில். – ஆய்வியல் நிறைஞர் (பகுதிநேரம் மற்றும் முழுநேரம்)
 • பிஎச்.டி. – முனைவர் பட்டம் (பகுதிநேரம் மற்றும் முழுநேரம்))
 • இதழியல் சான்றிதழ்க் கல்வி

துறை வரலாறு

எமது தமிழாய்வுத்துறை வரலாற்றுச் சிறப்பு மிக்கதாகும். இது பிஷப் ஹீபர் கல்லூரியின் மாபெரும் துறையாக விளங்குகின்றது. மொழி, இலக்கியம், கலை, பண்பாடு, நல்லொழுக்கம் ஆகியவற்றைக் கற்பிக்கும் இத்தமிழாய்வுத்துறை கல்லூரியின் முதுகெலும்பாக அமைந்துள்ளது. கல்லூரி தொடங்கப்பட்ட காலம் முதல் நிருவாகத்தின் இன்றியமையாத துறையாக இது இருந்து வருகின்றது

பொதுவாக எமது கல்லூரிக்கு இருவேறு வரலாற்று முகங்கள் உண்டு. 1882 முதல் 1934 வரை எஸ்.பி.ஜி கல்லூரியாக இருந்து, பிஷப் ஹீபர் கல்லூரியாகப் பெயர் மாற்றம் செய்துகொண்டு, சிறப்பாகச் செயல்பட்டமை முதல் காலகட்டமாகும். அப்பொழுது பிச்சை இபுராஹிம் புலவர், அமிர்தம் பிள்ளை, நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார், பி.சா.சுப்பிரமணிய சாஸ்திரி முதலான தமிழறிஞர்கள் இங்குப் பணிபுரிந்துள்ளனர். தமிழகச் சட்டப்பேரவையின் முதல் அரசவைக் கவிஞரான நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளை எமது துறையின் மேனாள் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது. மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர் எமது நிருவாகப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றியவர். சில காரணங்களால் எமது கல்லூரி 1934 இல் மூடப்பட்டு 1966 வரை சென்னைக் கிறித்தவக் கல்லூரியுடன் இணைக்கப்பட்டது.

1966 இல் மீண்டும் பிஷப் ஹீபர் கல்லூரி திருச்சிராப்பள்ளியில் உயிர்த்தெழுந்தது. அதிலிருந்து இரண்டாம் காலகட்டம் தொடங்கியது. 1968 ஆம் ஆண்டிற்குப் பிறகு பி.யு.சி. மற்றும் பட்ட வகுப்புகள் நடைபெறத் தொடங்கின. அப்பொழுது ஐந்து பேராசிரியர்கள் கொண்ட தமிழாய்வுத்துறையை முனைவர் ப.ச.ஏசுதாசன் தலைமையேற்று வழிநடத்தினார். பத்தாண்டுகளுக்குள் இத்துறையைச் சிறப்பாக வளர்த்தெடுத்துப் பதின்மூன்று பேராசிரியர்கள் பணியாற்றும் வகையில் பாடப்பிரிவுகளை உண்டாக்கினார். 1981 ஆம் ஆண்டு முதுகலைத்தமிழ் வகுப்புத் தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 1984 இல் பகுதிநேர ஆய்வியல் நிறைஞர், 1985 இல் முழுநேர ஆய்வியல் நிறைஞர், 1986 இல் பகுதிநேர முனைவர் பட்டம், 1987 இல் முழுநேர முனைவர் பட்டம் ஆகியவை தொடங்கப்பட்டன. பல வகைகளில் தமிழாய்வுத்துறை தொடர்வளர்ச்சியைப் பெறலாயிற்று. முனைவர் ப.ச.ஏசுதாசனைத் தொடர்ந்து முனைவர் யோ.டென்னிசன் (1994 - 2006), முனைவர் க.பூரணச்சந்திரன் (2006 – 2007), முனைவர் பெ.சுபாஷ் சந்திரபோஸ் (2007 – 2010), முனைவர் மேஜர் ச.சோமசுந்தரம் (2010 – 2015) ஆகியோர் தமிழாய்வுத்துறையின் தலைவராகச் செயல்பட்டுத் துறையைச் சிறப்பாக வளர்த்தெடுத்தனர். இதுவரை எமது தமிழாய்வுத்துறையில் நூற்று நாற்பது பேர் முனைவர் பட்டமும், ஐந்நூற்று ஐம்பது பேர் ஆய்வியல் நிறைஞர் பட்டமும் பெற்றுள்ளனர். தமிழ் உயராய்வுக்கல்வியில் இது குறிப்பிடத்தக்கதாகும். எம் துறையில் பயின்ற பெரும்பான்மையோர் பல்கலைக்கழகம், கல்லூரி, பள்ளி உள்ளிட்ட இடங்களில் பேராசிரியர்களாக, ஆசிரியர்களாக உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் இன்று பணியாற்றி வருகின்றனர். பல்வேறு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களிலும் அச்சு மற்றும் காட்சி ஊடகங்களிலும் எம் மாணவர்கள் சிறப்பாகப் பணியாற்றி வருவது மகிழ்ச்சியளிக்கிறது. இன்று 48 பேராசிரியர்கள் கொண்ட இத்தமிழாய்வுத்துறையை முனைவர் க.சோ.பால்சந்திரமோகன் அவர்கள் தலைமைப் பொறுப்பேற்று நன்முறையில் வழிநடத்திச் செல்கின்றார்.

நோக்கம்

 • சமூகத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு இலக்கியத்துடன் அறிவு, ஆளுமை, நல்லொழுக்கம் ஆகியவற்றையும் கற்பித்தல்.
 • மானுட விழுமியங்களையும் கிறித்தவச் சேவைமனப்பாங்கையும் மாணவர்களுக்கு முழுமையாக எடுத்துரைத்தல்.
 • நவீன அறிவியலையும் சமூக அசைவியக்கத்தையும் அறம்பிறழாமல் எதிர்கொண்டு வாழும் ஒழுங்கை மாணவர்களிடம் ஏற்படுத்துதல்.

பணி

கிராமப்புற ஏழை மாணவர்கள், குறிப்பாகப் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூகப்பிரிவினர், குடும்பத்தின் முதல் பட்டதாரி, பெண்கள், மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தார் போன்றோர் துறையில் சேர்ந்து பயில முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அவர்களுக்குத் தரமான இலக்கியக் கல்வியைக் கொடுத்துத் தன்னம்பிக்கை ஏற்படுத்தப்படுகிறது. ஆராய்ச்சிப் பட்டங்களைப் பயில அரசு தரும் உதவித்தொகைகளை மாணவர்கள் பெற வழிகாட்டப்படுகிறது. பட்டப்படிப்புகளை முடித்த மாணவர்கள் தகுந்த வேலைவாய்ப்பிற்கு நெறிப்படுத்தப்படுகின்றனர்.

ஆய்வுச்செயல்பாடுகள்

எமது துறை ஓர் ஆய்வுத்துறை என்பதால் முதுகலை, ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்ட மாணவர்களுக்குப் பேராசிரியர்கள் ஆய்வுநெறியாளர்களாக இருந்து வழிகாட்டுகின்றனர். படைப்பிலக்கியம் மற்றும் திறனாய்வு சார்ந்த பல்வேறு நூல்களை உருவாக்கியுள்ளனர். பல்கலைக்கழக மானியக் குழுவின் நிதி உதவியுடனான குறுந்திட்ட, பெருந்திட்ட ஆய்வுகளைப் பேராசிரியர்கள் செய்துவருகின்றனர். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் நிதி உதவியுடன் பல ஆய்வுக்கருத்தரங்குகளையும் பயிலரங்குகளையும் எமது பேராசிரியர்கள் ஒருங்கிணைத்து நடத்துகின்றனர்.

ஆசிரியர் கருத்தரங்கம்

எமது துறையில் ஒவ்வோர் ஆண்டும் இரண்டு ஆசிரியர் கருத்தரங்குகள் நடைபெறும். துறையில் பணியாற்றும் பேராசிரியர்களில் செம்பாதியினர் முதல் கருத்தரங்கிலும், எஞ்சியோர் மறுகருத்தரங்கிலும் ஆய்வுக்கட்டுரையை வாசித்தளிக்க வேண்டும். இக்கருத்தரங்குகள் தமிழாய்வுத்துறையின் அனைத்துப் பேராசிரியர்கள், முதுகலை, ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்ட மாணவர்கள் நடுவே நிகழும். இதன்மூலம் மாணவர்களுக்கு ஆய்வுமனப்பாங்கும் தர்க்கப்பூர்வமாக விவாதிக்கும் அறிவும் புகட்டப்படுகின்றன. கடந்த 23 ஆண்டுகளில் இதுவரை 46 கருத்தரங்குகள் இடையறாமல் நடந்துள்ளன. இது தமிழாய்வுத்துறையின் தனி முத்திரைகளுள் ஒன்றாகும்.

பல்கலைக்கழக அளவிலான மாணவர் கருத்தரங்கம்

ஒவ்வோர் ஆண்டும் ஹீபர் தமிழாய்வுத்துறையில் திருச்சிராப்பள்ளி, பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரி மாணவர்களுக்கான தமிழாய்வுக் கருத்தரங்கம் நடத்தப்படுகின்றது. இதில் பல்வேறு கல்லூரியைச் சார்ந்த மாணவர்கள் ஆய்வுச்சிந்தனையைப் பரிமாறிக்கொள்ளவும் கலந்து விவாதிக்கவும் வாய்ப்பு உண்டாகின்றது. தற்காலத் தமிழாய்வுப் போக்கை அறியவும், திட்டக்கட்டுரை, ஆய்வேடு உருவாக்கத்திற்கான தெளிவைப் பெறவும் இக்கருத்தரங்குகள் பயன்பட்டதாகப் பல கல்லூரி மாணவர்களும் பேராசிரியர்களும் எதிரூட்டு அளித்துள்ளனர்.

இலக்கிய வட்டம்

எமது தமிழாய்வுத்துறையில் பேராசிரியர்கள், மாணவர்களை உள்ளடக்கிய ஓர் இலக்கிய வட்டம் (Literary Circle) செயல்படுகின்றது. மாதம் இருமுறை வியாழக் கிழமைகளில் தமிழாய்வுத்துறையில் அனைவரும் கூடுவர். முன்னறிவித்தபடி ஏதேனும் ஒரு புதிய படைப்பிலக்கிய, திறனாய்வு நூலைப் பேராசிரியர் ஒருவர் அறிமுகம் செய்து, அது குறித்த விமர்சனத்தை முன்வைப்பார். இது சுழற்சிமுறையில் நடைபெறும். அன்று எந்த நூல் குறித்துப் பேசப்படுகின்றது என்பதை முன்னரே அறிவித்துவிடுவதால் மாணவர்களும் ஆசிரியர்களும் அதனைப் படித்து வந்து விவாதிப்பர். ஒரே நூலைப் பற்றிய பல்வேறு பார்வைகள் வெளிப்படுவது அறிவுக்கு விருந்தாகும். சில வேளைகளில் திரைப்படங்களை விமர்சனம் செய்வதும் உண்டு.

அறக்கட்டளைகள்

தமிழ்ப்பணிகள் தொய்வின்றி நிகழ நல்லுள்ளம் படைத்த புரவலர்கள் பல அறக்கட்டளைகளை எமது துறையில் நிறுவியுள்ளனர். அவற்றின் விவரம் வருமாறு.

வ.எண் அறக்கட்டளையின் பெயர் நிறுவியோர்
1. முனைவர் பெரியண்ணன் சவரிராயன் ஏசுதாசன் அறக்கட்டளை முனைவர் ப.ச.ஏசுதாசன்
2. முனைவர் தமிழ்மாமணி ப.ச.ஏசுதாசன் அறக்கட்டளை தமிழாய்வுத்துறை
3. பேராசிரியர் தே.சுவாமிராஜ் அறக்கட்டளை தமிழாய்வுத்துறை
4. முனைவர் வி.ப.கா.சுந்தரம், குடந்தை சுந்தரேசனார் அறக்கட்டளை முனைவர் அ.கோபிநாத்
5. முனைவர் ஆறு.அழகப்பன் அறக்கட்டளை முனைவர் ஆறு.அழகப்பன்
6. திருமதி லீலாபாய் அறக்கட்டளை முனைவர் யோ.டென்னிசன்
7. பேரருட்திரு முனைவர் சாலமோன் துரைசாமி அறக்கட்டளை உலகக் கிறித்தவத் தமிழ்ப்பேரவை
8. முனைவர் மேஜர் ச.சோமசுந்தரம் அறக்கட்டளை பேராசிரியரின் ஆய்வுமாணவர்கள்
9. முனைவர் க.பூரணச்சந்திரன் படைப்பிலக்கிய, திறனாய்வு அறக்கட்டளை பேராசிரியரின் ஆய்வுமாணவர்கள்
10.மாணவி சரிதா தினகரன் அறக்கட்டளை திருமதி சரிதா தினகரன்

தமிழ்ப்பேரவை

மாணவர்களின் கலைசார் தனித்திறனைக் கண்டறிந்து ஊக்கப்படுத்தி முன்னேற்றுவதற்காகத் தமிழ்ப்பேரவை ஏற்படுத்தப்பட்டது. இதுவே பிஷப் ஹீபர் கல்லூரியின் மிகப்பெரிய பேரவையாகும். அனைத்துத் துறை மாணவர்களையும் உள்ளடக்கியதாக இது விளங்குகின்றது. ஒவ்வோர் ஆண்டும் சுழற்சிமுறையில் தமிழாய்வுத்துறைப் பேராசிரியர்கள் இருவர் இதற்குத் தலைவர்களாக நியமிக்கப்படுவர். ஒருவர் காலைப்பிரிவு மாணவர்களையும் மற்றொருவர் மாலைப்பிரிவு மாணவர்களையும் பேரவையுடன் ஒருங்கிணைத்து வழிநடத்தும் பணியை மேற்கொள்வர். ஒவ்வொரு வகுப்பிற்கும் இரு மாணவர்கள் (ஆண் மற்றும் பெண்) தமிழ்ப்பேரவைப் பொறுப்பாளர்களாகத் தெரிவுசெய்யப்படுவர். அவர்களுக்கு இடையே பொது வாக்கெடுப்புமுறையில் தமிழ்ப்பேரவையின் மாணவர் தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகியோர் தெரிவுசெய்யப்படுவர்.

ஆண்டுதோறும் தமிழ்ப்பேரவையின் சார்பாகச் சிறப்புச் சொற்பொழிவு, கவியரங்கம், கருத்தரங்கம், பட்டிமன்றம், வழக்காடு மன்றம், கலை நிகழ்ச்சி ஆகியவை நிகழ்த்தப்படுகின்றன. கல்லூரி மாணவர்களின் பேச்சு, எழுத்து, படைப்புத் திறன்களை வளர்க்கும் வகையில் பேச்சு, கவிதை, கதை, கட்டுரை, வினாடி வினா, பாட்டு, நடனம், நாடகம், குறும்படம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்திப் பரிசுகள் வழங்கப்படுகின்றன.

முத்தமிழ் விழா

முத்தமிழ் விழா

தமிழ்ப்பேரவையின் மணிமகுடமாகத் திகழ்வது முத்தமிழ் விழாவாகும். இது மாணவர்களிடம் புதைந்திருக்கும் கலைத்திறனை வெளிக்கொணரும் விழா. முத்தமிழ் விழாப் போட்டிகளில் பங்கேற்றுப் பரிசுகளை வென்றோரின் பல்சுவைக் கலை நிகழ்ச்சிகள் விழாவில் அறங்கேற்றப்படும். இயல் விழாவில் புகழ்பெற்ற அறிஞர் ஒருவர் பொழிவாற்றுவார். எமது கல்லூரி மாணவர்கள், தொழில்முறைப் பேச்சாளர்களுக்கு இணையாக அவர்களுடன் பட்டிமன்ற, வழக்காடு மன்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுத் திறமை காட்டுவார்கள். இசை, நாடகக் குழுக்கள் விழாவில் விருந்து படைக்கும். முத்தமிழ் விழாவில் வென்றோர் சிறப்புவிருந்தினரிடம் பரிசு பெறுவர். புள்ளிகளின் அடிப்படையில் முதல் மூன்று இடங்களைப் பெறும் துறைக்குச் சுழற்கோப்பை, கேடயங்கள் வழங்கப்படும். ஒட்டுமொத்தக் கல்லூரியின் கலைவிழாவாக, திருவிழாவாக இஃது அமைந்திருக்கும்.

விரிவாக்கப் பணிகள்

எமது துறைப்பேராசிரியர்கள் அருகில் உள்ள ஒரு சிற்றூர்க்குச் சென்று விரிவாக்கப் பணிகளைச் செய்துவருகின்றனர். கிராமப்புற மாணவர்களுக்கு இலக்கணம், படைப்பிலக்கியம் போன்றவற்றில் பயிற்சி அளிப்பர். பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு எழுத்து உதவுநராக எமது மாணவர்கள் செயல்படுகின்றனர். எமது துறையின் பேராசிரியர்களும் மாணவர்களும் தமிழர் திருநாளான பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் ஒரு கிராமத்திற்குச் சென்று அங்குள்ள மக்களுடன் சேர்ந்து பொங்கலிட்டு மகிழ்வர். அப்பொழுது பள்ளி மாணவர்களுக்குப் போட்டி நடத்திப் பரிசளித்தல், கிராம மக்களுக்காகக் கலைநிகழ்ச்சிகளை நிகழ்த்திக் காட்டுதல், உழவர்களுக்குப் பொங்கல் பரிசளித்தல் முதலான நிகழ்வுகள் நடைபெறும்.

எதிர்காலத் திட்டங்கள்

 • ஒலிப்புமுறைப் பயிற்சி உள்ளிட்டவற்றை நவீனமுறையில் கற்பிக்க எமது துறைக்கென மொழி ஆய்வகம் ஒன்றை உருவாக்குதல்.
 • பேராசிரியர்களும் ஆராய்ச்சி மாணவர்களும் பயன்கொள்ளும் வகையில் ISSN பெற்ற ஆய்விதழ் ஒன்றைத் துறையின் சார்பாகத் தொடங்குதல்.
 • இப்பொழுது பிற துறையுடன் சேர்ந்து பயன்பாட்டுத்தமிழ் தொடர்பான கருத்தரங்குகள், பயிலரங்குகள் நிகழ்த்தப்பட்டு வருவதைப் போல எதிர்காலத்தில் பல்துறை நோக்கிலான கூட்டுத் தமிழாராய்ச்சியை முன்னெடுத்தல்.

தொடர்புக்கு • முனைவர் ராஜ்குமார் P
 • துறைத்தலைவர்